சொகுசு ரெயிலில் இலவச டிக்கட் : நாடாளுமன்றக் குழு கண்டனம்!

டில்லி

குறிப்பிட்ட சிலருக்கு ரெயில்வே நிர்வாகம் சொகுசு ரெயில்களில் இலவச டிக்கட் அளிப்பதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரெயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்து வருகிறது.   அதற்காக ரெயில்வேத் துறை கட்டணங்களை உயர்த்த உத்தேசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.   பொதுவாக சொகுசு ரெயில்களில் முழு அளவு  பயணச் சீட்டுகள் விற்பனை ஆவதில்லை எனவும் நஷ்டத்துக்கு அதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மகாராஜா ரெயிலின் உட்புறம்

இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்தோபாத்யாய் தலைமையில் ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு இது குறித்து ஆராய்ந்துள்ளது.   அந்தக் குழு தனது ஆராய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.   அந்த அறிக்கையில், “ஐ ஆர் சி டி சி பரிந்துரையின் பேரில் சொகுசு ரெயில்களில் நூற்றுக் கணக்கானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.   இவர்களில் பெரும்பாலானோர் ரெயில்வே அதிகாரிகள் ஆவார்கள்.   இவர்களுக்கு இது போல பயணச் சலுகை அளிக்க வசதியாக சட்டங்களில் வழிவகை செய்யப்பட்டுள்ளது குழுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உதாரணமாக மகாராஜா சொகுசு ரெயிலில் மட்டும் 2012-13 ஆம் ஆண்டில் இலவசப் பயணிகளின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது.   அதன் பின்  2013-14ல் 97 பேர், 2014-15ல் 53 பேர், 2015-16ல் 73 பேர் பயணித்துள்ளனர்.   இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச பயணச்சீட்டுகளின் மதிப்பு ஒருவருக்கு ரூ. 31637 முதல் ரூ,41128 வரை உள்ளன.    சொகுசு ரெயில் மூலம் நஷ்டம் ஏற்படுவதாக கூறும் ரெயில்வே நிர்வாகம் இவ்வளவு இலவச டிக்கட்டுகளை அளிப்பதற்கான காரணம் தெரியவில்லை.   இந்த இலவச டிக்கட்டுகள் வழங்குவதை உடனடியாக நீக்க வேண்டும்”  என கூறப்பட்டுள்ளது,