நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது! இலங்கை உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

கொழும்பு:

லங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும்,  நான்கரை வருடங்கள் வரை நாடாளுமன்றைக் கலைக்கமுடியாது எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி  உள்ளது.

அதிபர் சிறிசேனா

சமீபத்தில் இலங்கை பிரதமராக செயல்பட ராஜபக்சேவுக்கு தடை விதித்த உச்சநீதி மன்றம், இன்று அதிபரின் உத்தரவு செல்லாது என்று அறிவித்து உள்ளது. இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் அதிபர் மைதிரிக்கும், பிரதமர் ரணிக்கும் இடையே ஏற்பட்ட புகைச்சல் காரணமாக, பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்குவதாக இலங்கை அதிபர் மைதிரி சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26ந்தேதி அறிவித்தார். தொடர்ந்து, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்து பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆனால், ராஜபக்சேவால், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத நிலையில், ரணிலும் பதவி விலக மறுத்து வந்தார்.

இதுதொடர்பாக இலங்கை உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து கடந்த 3ந்தேதி ராஜபக்சே பிரதமராக பதவியில் தொடர நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், வரும் 12 ஆம் தேதி ராஜபட்சே தனது அமைச்சர்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் கூறியது.

இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்கள் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன, புவனேக அலுவிஹாரே , விஜித் மலல்கொட , சிசிர டீ ஆப்ரூ, முருது பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட குழு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மற்றும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்ட அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது என்று அதிரடியாக கூறி உள்ளது.

#SriLanka #Parliament