விவசாயிகள் பிரச்னைகளை தவிர்க்கவே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: மத்திய அரசு மீது சிவசேனா புகார்

டெல்லி: விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதத்தை தவிர்க்கவே குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நவம்பர் 26ம் தேதி முதல் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிய போராட்டம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ரவுத், கொரோனாவை காரணம் காட்டி குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது என்றார்.

ஆனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ததன் மூலம், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்றும் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.