பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பார்லி சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

--

டில்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை (18ந்தேதி) தொடங்க உள்ள நிலையில் வரும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பாக குலாம்நபி ஆசாத்,  ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களை பா.ஜ. அமைச்சர்கள் விஜய்கோயல் மற்றும் ஆனந்த்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வருகை தரும் காங். மற்றும் தேசியவாத காங். தலைவர்கள்

அதுபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கலந்துகொண்டார். மற்றும் கம்யூ னிஸ்டு தலைவர்கள், அதிமுக, திமுக எம்.பி.க்கள் உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் (ஜூலை) 18ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 10ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த  மழைக்கால கூட்டத்தொடரில்  முத்தலாக் மசோதா, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில்,  கூட்டத்தொடரை  அமைதியாகவும், சுமூகமாகவும்  நடைபெற ஒத்துழைப்பு வழங்க கோருவது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ்யசபா கட்சி உறுப்பினர்களின் கூட்டமும் ராஜ்ய சபா தலைவர் வெங்கய நாயுடு தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தொடங்க உள்ள  மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் காரசார விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.