புதுடெல்லி: வாட்ஸ்ஆப் மூலம் குறிப்பிட்ட பல தனிநபர்களின் கணக்குகள் உளவு பார்க்கப்படுவதாக எழுந்த கடும் புகார்களையடுத்து, அதுதொடர்பாக விவாதிக்க, நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நாட்டிலிருந்து பெறப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்தியாவிலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர்களின் தனிப்பட்ட கணக்குகள் வேவு பார்க்கப்படுகின்றன என்ற தகவல் வெளியானது.

வாட்ஸ்ஆப் தொடர்பான ஒரு வழக்கில், அமெரிக்க நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு தகவலையடுத்தே இந்தப் பிரச்சினை வெடித்தது. எனவே, இதுகுறித்து பதிலளிக்குமாறு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

மொத்தம் 1400 இந்தியப் பயனாளிகளை, இஸ்ரேலிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்திய அரசு வேவு பார்த்ததாக பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, அரசுக்கு எதிரான கருத்துடையோர் வேவு பார்க்கப்பட்டனர் என்ற புகார் கிளம்பியது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் தனியுரிமை மீறல் குறித்து விவாதிக்க, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடி விவாதிக்கவுள்ளதாக தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்கூட்டத்தில், வாட்ஸ்ஆப் நிறுவனம் அளித்த பதில்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.