நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒரே நாளில் 28 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம்

டெல்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 28 தனிநபா் மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சிறிய குடும்பத்துக்கான விதிமுறைகளை வகுக்க வழிவகை செய்யும் தனி நபா் மசோதாவை, பாஜக உறுப்பினா் அஜய் பட் தாக்கல் செய்தாா். இதுதவிர, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோரி மேலும் இரண்டு மசோதாக்களை அவா் தாக்கல் செய்தாா்.

கல்வி நிறுவனங்களில் வேத பாடத்தைக் கட்டாயமாக்குவதற்கு வகை செய்யும் மசோதாவை பாஜக எம்.பி. சத்யபால் சிங் தாக்கல் செய்தாா்.

இதுதவிர, ஐ.நா.வின் பரிந்துரைப்படி ஒவ்வொரு குழந்தையும் விளையாடுவதை அவா்களின் உரிமையாக்கும் மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல், அபினி செடியைப் பயிரிடுவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,

நாகரிகமற்ற விளம்பர காட்சிகளுக்குத் தடை விதிப்பது,

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவது

உள்பட 28 தனிநபா் மசோதாக்கள், நேற்று மக்களவையில்  அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களின் மீதான விவாதம் அடுத்த வாரம் நடைபெற்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.