குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது: வாஜ்பாய் உள்பட மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல்

டில்லி:

5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்ந்து இன்று தொடங்கியது.

கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியதும் வழக்கமான நடைமுறைகள் முடிந்ததும், மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்பட மறைந்த எம்.பி.க்க ளுக்கு பாராளுமன்றத்தின் இரு  அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

மோடி தலைமையிலான மத்தியஅரசின் கடைசி தொடர் இது என்பதால், தேர்தலை மையமாக கொண்டு மத்தியஅரசு பலவேறு சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடைபெறும் வகையில், எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு  நல்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். மேலும்,  நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறிய மோடி, நாட்டு மக்களின் நலன் கருதி சபையை சுமுகமாக நடத்த வேண்டியது நம் அனைவரின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்று கூறிய குலாம்நபி ஆசாத், சி.பி.ஐ. போன்ற விசாரணை நிறுவனங்களை அரசு தவறாக பயன்படுத்துவது குறித்தும் கேள்வி எழுப்புவோம் என்று கூறினார்.

இதற்கிடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக குளிர்கால கூட்டத்தொடரில் சிறப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என வலியுறுத்திய சிவசேனா பிரதிநிதி சந்திரகாந்த் கைரே, தவறும்பட்சத்தில் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் முத்தலாக் அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக எம்.பி.க்கள் மேகதாது அணை பிரச்சினையை எழுப்பி, இரு அவைகளையும் முடக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் மோடி அரசின் கடைசி கூட்டத்தொடர் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.