டில்லி:

17வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் ஜூன் 17ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியை பாஜக அமைச்சர் பிரகலாத் தலைமையில் 3 அமைச்சர்கள் நேரில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து அழைப்பு விடுத்தனர்.

17வது மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மோடி தலைமையில் பாஜக மீண்டும் அரியணை ஏற்றி உள்ளது. இதையடுத்து பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் வரும் 17ந்தேதி தொடங்க உள்ளது. அன்று தற்காலிக சபாநாயகர் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் மற்றும் ஜூன் 20ந்தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூலை 5ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஜூலை 26ந்தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் மெக்வால் தலைமையில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, அவருக்கு பூங்கொத்து கொடுத்து கொடுத்து பாராளுமன்ற தொடரில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.