வாரக்கடன் வசூல் : முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் உதவி கோரும் பாராளுமன்றக் குழு

டில்லி

வாராக்கடன் வசூல் பற்றி ஆராய அமைக்கப்பட்ட பாராளுமன்றக் குழு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை கேட்டுள்ளது.

தற்போது  வங்கிகளில்  வாரக்கடன்கள் அதிகமாகி வருகின்றன.   கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் இந்த கடன் தொகை ரூ.8 லட்சத்து 99 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது.   இது சென்ற ஆண்டை விட 10.11% அதிகமாகும்.   அத்துடன் வங்கி கடன் மோசடி செய்வோர் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளது.  இதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு ஒரு பாராளுமன்றக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு தலைவராக பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் சுப்ரமணியன் குழுவுக்கு ஆலோசனை அளிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை அழைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.   ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த போது வாராக்கடன்களை கட்டு மீறாமல் வைத்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவரது யோசனையை ஏற்றுக் கொண்டுள்ள பாராளுமன்றக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ரகுராம் ராஜனுக்கு ஆலோசனை வழங்கக் கோரி  ஒரு கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகின.   இந்த செய்தியை நமது  பத்திரிகை.காம் ஏற்கனவே பகிர்ந்துள்ளது.    அந்த செய்தியை தற்போது பாராளுமன்றக் குழு உறுதி செய்துள்ளது.