நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம்: ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த மோடி அரசு

டில்லி:

நாடாளுமன்ற தேர்தலில்  தோல்வி அடைந்துவிடுவோம் என்று எழுந்துள்ள பயம் காரணமாக, மோடி அரசு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து சிறு குறு தொழில்களை நசுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது. உலகளாவிய வர்த்தக சந்தையை இந்தியாவில் திறந்துவிட்டு, சிறுகுறு வியபாரிகளையும், நிறுவனங்களையும் ஒழித்து வருகிறது. விவசாயிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவைகளால் மக்கள் மோடி அரசு மீது கடுமையான கோபத்துடன் இருந்து வருகின்றனர். அவர்கள் தங்களது கோபத்தை வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் மூலம் செலுத்த தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில்  சமீபகாலமாக நடைபெற்று வந்துள்ள தேர்தல் முடிவுகள் மோடி அரசுக்கு சரியான பின்னடைவை கொடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள், பாஜக அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

மக்களின் இந்த முடிவு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.  இதன் காரணமாக பாஜக திக்கு தெரியாமல் தவித்து வருகிறது.

கடந்த வாரம் மக்களை பெரும் துன்புறுத்தி வரும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சலுகைகள் வழங்குவதாக அறிவித்து ஏமாற்றி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் சலுகை அறிவிப்புகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பல்வேறு சலுகைகள், கேஷ் பேக் போன்ற அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன.

இதுபோன்ற அறிவிப்புகளை தடுக்கும் வகையில்,கட்டுப்பாடுகள் விதித்து, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது. 

நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும். 

ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 % மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும். 

தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. 

தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது. 

கேஷ் பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது.

இந்த புதிய விதிமுறைகள் வரும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு இல்லாமல் உள்நாட்டு நிதியில் செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் நலன்களைக் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி