நாடாளுமன்ற தேர்தல்2019: அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி அறிவிப்பு….

சென்னை:

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், அதிமுகவில், தேர்தலில்  போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வரும்  11, 12-ந் தேதிகளில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி  இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.  பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க.வுக்கும், த.மா.கா. வுக்கும் இன்னும்  தொகுதிகள்  ஒதுக்கப்படாத  நிலையில்,அதிமுகவும் இடங்களில் அதிமுக போட்டியிடப்போகிறது என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்,  தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணலை நடத்த இருக்கிறது.

குறிப்பிட்ட தேதியில், அந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு  நேரில் வர  அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

11ந்தேதி

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி விருப்ப மனு அளித்துள்ள கட்சி தொண்டர்களுக்கான நேர்காணல், 11-3-2019, 12-3-2019 ஆகிய 2 நாட்கள் நடைபெற இருக்கிறது.

11-ந் தேதி காலை 9.30 மணிக்கு சேலம், கள்ளக் குறிச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கும், மாலை 3 மணிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற இருக்கிறது.

12-ந் தேதி

12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூர் (தனி), வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளுக்கும், மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரி, தங்களுக்கு மட்டும் விருப்ப மனு அளித்துள்ள தொண்டர்கள் அனைவரும், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தவறாமல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் அலுவலகத்துக்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதியான பிறகு, அந்த தொகுதிகளுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படு வார்கள். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட்ட பிறகே அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி