நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறும் குற்றத்துக்கு இடமளிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துஅவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி, மே முதல் வாரம் வரை ஐந்து கட்டங்களாக நடைபெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலையும் இணைந்து நடத்துவதுதான் சரியான நியாயமான, நேர்மை யான நடுநிலை தவறாத அணுகுமுறையாகும்.

ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று இதுவரை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிக்கவில்லை என்பதும் ஜனநாயகத் துக்கு எதிரான அணுகுமுறைதான்.

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, சட்டமன்றத் தேர்தல்களையும், நாடாளு மன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்தும் நிலை ஏற்பட வேண்டும் என்று கூட்டாட்சித் தத்து வத்துக்கு எதிரான விபரீதமான கருத்தைக் கூறி வந்தார். ஆனால், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு, 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் இணைந்து நடத்துவதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையம் எந்தவிதமான பாரபட்சத்துக்கும் இடம் தராமல், ஆளும் கட்சிக்கு அணுசரணையாக இல்லாமல் நடுநிலை யோடு செயல்படும்போதுதான் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும் – ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

கிடைக்கின்ற தகவல்களின்படி, நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் இணைந்து நடத்தாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாகத் தெரிகிறது. அந்த அழுத்தத்துக்கு உடன்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்பட்டால், ஜனநாயகக் கோட்பாட்டுக்கு கேடு செய்கின்ற குற்றவாளி என்ற சரியான குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும்.

இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாக தலைமைத் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. களங்கத்துக்கு ஆளாக வேண்டாம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.