நாடாளுமன்றச் சட்டமே நிரந்தரத் தீர்வு!: பாமக நிறுவனர்  ராமதாஸ்

--


ஜல்லிக்கட்டு குறித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை அவரேற்றுள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நாடாளுமன்றச் சட்டமே நிரந்தர தீர்ாவு என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டத்தை மாநில ஆளுனர் பிறப்பித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எழுந்த எழுச்சியைத் தொடர்ந்து  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை பா.ம.க. வரவேற்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் போதிலும் தமிழகம் எதிர்கொண்டு வரும் கலாச்சார மற்றும் பண்பாட்டுத் தாக்குதலுக்கு இது நிரந்தரத் தீர்வாகத் தோன்றவில்லை. தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன. நாளை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், நாளை மறுநாள் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் அவசர சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால், உடனடியாக தடை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான அவசர சட்டம் முழுமையான மனநிறைவு அளிக்கவில்லை.

தமிழக அரசின் சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டம் தான் ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு தகவலை கூறுகிறார் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு காரணம் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவிக்கை வெளியிட்டது தான். 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் தான் அந்த அறிவிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியும். மாநில அரசின் அவசர சட்டத்தாலோ அல்லது முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதைப் போல நாளை மறுநாள் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமோ ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியும் என்று தோன்றவில்லை. இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சோரப்ஜி உள்ளிட்ட சட்ட வல்லுனர்களும் இதேபோன்ற கருத்தைத் தான் தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008&ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பதற்காக 2009&ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முறைப்படுத்தும் சட்டம்&2009 என்ற சிறப்புச் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 21.07.2009 அன்று  தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த சட்டம் செல்லாது என்று அறிவித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலமே தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க முடியும் என்று தோன்றுகிறது.

எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு நிரந்தர சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில், காளைகளை  காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி, 1960&ஆம் ஆண்டில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டத் திருத்த முன்வடிவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.அதேபோல் தமிழர்களின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், இந்திய நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை தடை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.