அரசு பணியில் சேருவோருக்கு 5 ஆண்டுகள் கட்டாய ராணுவ பயிற்சி….நாடாளுமன்ற குழு பரிந்துரை

--

டில்லி:

இந்திய ராணுவத்தில் 7,679 அதிகாரிகள், 20,185 ஜூனியர் கமிஷன்ட் அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளது. இதேபோல் கடற்படையில் 1,434 அதிகாரிகள், 14.730 மாலுமிகள் பணியிடம் காலியாக உள்ளது. விமானப் படையில் 146 அதிகாரிகள் மற்றும் 15,357 வான் வீரர்கள் பணியிடம் காலியாக உள்ளது என்று  ராணுவத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பற்றாகுறையை போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் கெசடட் அதிகாரிகள் அந்தஸ்திலான பணியில் சேருவோர் கட்டாயம் 5 ஆண்டுகள் ராணுவப் பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘‘அதிகாரிகள் பாற்றாகுறை விவகாரத்தை பாதுகாப்பு துறை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒதுக்கீடு செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகளின் பணியிடம் 49,932 ஆகும். இதில் தற்போது 42,253 பேர் மட்டுமே உள்ளனர். கடற்படைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடம் 11,827. தற்போது 10,384 பேர் மட்டுமே உள்ளனர். கடற்படை ஊழியர்கள் பணியிடம் என்பது 71,656 ஆகும். ஆனால், இதில் 57,310 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இந்திய விமான படைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகாரிகள் பணியிடம் 12,549 ஆகும். இதில் 12,340 பணியாற்றுகின்றனர். வான் வீரர்கள் பணியிடம் 1,42,529 ஆகும். இதில் 1,27,510 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.