நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒழுங்கா நடக்குமா?….எதிர்கட்சிகள் கவலை

டில்லி:

நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கூட்டத் தொடரின் போது இரு அவைகளும் முழுக்க முழக்க அமளி துமளியோடு எவ்வித ஆக்கப்பூர்வ முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவடைந்தது.

2000ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு ஒரு கூட்டத் தொடர் எவ்வித முடிவுகளும் ஏற்படாமல் முடிவடைந்தது என்று ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. மிக மோசமாக, துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு ஆந்திரா வகை இரவு விருந்தை எம்.பி.க்களுக்கு வழங்காமல் ரத்து செய்யும் அளவுக்கு கோபம் வெளிப்பட்டது. அதேபோன்ற நிலை இந்த முறையும் ஏற்படுமோ? என்ற அச்சம் எதிர்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா கூறுகையில்,‘‘காங்கிரஸ் சார்பில் பல பிரச்னைகள் குறித்து அளிக்கப்பட்ட நோட்டீஸ் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசு மோதல் மனப்பான்மையை கைவிட்டு நாடாளுமன்றம் மக்கள் நலன் சார்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும். கூட்டத் தொடர் முழுவதும் பயனற்ற முறையில் முடிவடைய மத்திய அரசு அனுமதிக்க கூடாது’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘எதிர்கட்சிகளுடன் மோடி அரசு எவ்வித பேச்சுவார்த்தையும் இது வரை நடத்தவில்லை. அவர்களுக்கு மோதலில் தான் நம்பிக்கை உள்ளது. ஒரு மித்த கருத்தில் நம்பிக்கை இல்லை. பிரதமர் மோடியும் நாடாளுமன்ற நடைமுறையில் இருந்து தப்பிக்கவே நினைக்கிறார். அவர்களது மனநிலை எங்களுக்கு தெரியும். எங்களது நிலைப்பாடு வரும் 16,17ம் தேதிகளில் தெரிவிக்கப்படும்’’என்றார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக காங்கிரஸ் விரும்பும். அதற்கு ஏற்ற நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் அக்கட்சி மேற்கொள்ளும். குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம், முத்தலாக் தடை சட்டம், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பும்.

அதோடு இந்த கூட்டத்தில் ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்தாக வேண்டும். ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் அடுத்த சில நாட்களில் டில்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் துணைத் தலைவர் நியமனம் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சேகர் ராயை ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு முன்நிறுத்த எதிர்கட்சிகள் மத்தியில் ஒரு மித்த கருத்து ஏற்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.