டில்லி:

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 18ந்தேதி முதல் டிசம்பர் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பதவி ஏற்றதும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த  ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை நேரம் முடிவடைந்தும், சில மசோதாவை நிறைவேற்றுவதற்காக நள்ளிரவு வரையும் அவை நடைபெற்றது. அதையடுத்து, கடந்த  ஆகஸ்டு 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இரு அவை செயலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் உள்பட 2 அவசரச் சட்டங்களை நிரந்த சட்டங்களாக நிறைவேற்ற மத்திய அரசு  முடிவு செய்துள்ளதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2019-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை செய்தும், இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதும் சட்டமும் அவசரச் சட்டங்களாக கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.