புதுடெல்லி:

2018-19 ஆண்டு இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு போலி செய்தி தொடர்பாக 447 புகார்கள் வந்துள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்களவை உறுப்பினர் ஓவாய்ஸி எழுப்பிய கேள்வியில், போலி செய்தி தொடர்பாக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?அப்படி கவனத்தில் கொண்டிருந்தால், எத்தனை புகார்கள் வந்துள்ளன?
இந்த விசயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதா? ஆம் என்றால் போலி செய்திகளை தடுக்க எந்த சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் அளித்த பதிலில், ஊடகத்தில் வரும் போலி செய்திகள் குறித்து அவ்வப்போது அரசின் கவனத்துக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

வாட்ஸ்அப் மற்றும் ஊடகங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கவனித்து வருகிறது.

துல்லியமான மற்றும் நேர்மையான செய்தியை பிரசுரிக்கும் வகையில், பத்திரிகை நடத்தை தொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதன்படி, குற்றம் செய்தவர்களை எச்சரிக்கவோ, பத்திரிக்கை, ஆசிரியர் அல்லது பத்திரிக்கையாளரை தணிக்கைக்கு உட்படுத்த இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு ஊடகங்களைப் பொருத்தவரை,1995 கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தின் படி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் ஆபாசமாக,அவதூறு பரப்பும் வகையில், பாதி உண்மையை வைத்து கொண்டு பொய் செய்தி பரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு ஊடகங்கள் என்பிஎஸ்ஏ, என்பிஏ மற்றும் பிசிசிசி எனப்படும் அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.