நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: டிசம்பர் 2வது வாரத்தில் தொடக்கம்?

டில்லி:

ந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் தொடங்குவதிலும் தாமதமாகி உள்ளது.  டிசம்பர் மாதத்தின் 2வது வாரம் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் கடைசியாக ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  டிசம்பர் 7ந்தேதி  நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 11ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையடுத்தே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு  விரைவில் கூடி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மழைகாலக் கூட்டத்தொடரின்போது, தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் போன்ற சில மசோதாக்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், அதை நிறைவேற்றும் வகையில் இந்த கூட்டத்தொடர் இருக்கும் என நம்பப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த கூட்டத்தொடரின்போது, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பா காங்கிரஸ் புயலை கிளப்பும் என்றும், அது தொடர்பான விவாதங்கள்  அனல்பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர்  15ந்தேதி தொடங்கி ஜனவரி 5ந்தேதி வரை நடைபெற்ற நிலையில், தற்போதும் அதுபோலவே நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.