மும்பை: அந்தேரி ரயில் நிலைய பாலத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து
மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலைய பாலத்தில் இன்று ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள அந்தேரி நகரில் உள்ள ரயில் நிலைய தினமும் பல்லாயிரம் பேர் வந்துசெல்லும் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்தை ஒட்டி அந்தேரி மேற்கு மற்றும் அந்தேரி கிழக்கு ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில்வே பாலம் இருக்கிறது. இந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா என சோதித்து வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாலத்தின் இடிபாடுகள் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதால், ரயில்சேவையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் காலை வேளையில், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.