பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு, தியேட்டர்களில் சினிமா பார்த்த தனது அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டி:

‘’நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால், ’’பிரிமியர்’’ காட்சிகளுக்கு அழைப்பு வரும். குறைந்த பட்சம் வாரம் ஒரு சினிமா பார்த்து விடுவேன்.
நான் சிறுவனாக இருந்த போது, எனது பெரியப்பா( இளையராஜா) இசை அமைத்த திரைப்படங்களே அதிகம் ரிலீஸ் ஆகும்.
இதனால் அனைத்து படங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு வந்து விடும்.
நான் 15 வயதிலேயே லண்டன் சென்று விட்டேன். அங்கு சென்றதும் சினிமா பார்க்கும் ஆவல் அதிகரித்தது.அங்கு படம் பார்ப்பது அலாதி அனுபவம். எனினும், அதிக செலவு பிடிக்கும்.
லண்டனில் நான் படித்துகொண்டிருந்தபோது, தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க அதிக செலவு செய்ய முடியாது.
இதனால் சினிமா பார்ப்பதற்காக அங்குள்ள தியேட்டர்களில் பகுதி நேரமாக வேலை பார்த்துள்ளேன்.
இருக்கையில் அமர ரசிகர்களுக்கு வழி காட்டுவது, கவுன்டரில் டிக்கெட் கொடுப்பது, டிக்கெட் கிழிப்பது என பல வேலைகள் பார்த்துள்ளேன்.
1990 களில் நிறைய இந்திய சினிமாக்கள் லண்டனில் ரிலீஸ் ஆகும். பெரும்பாலும் காலை 11.30 மணி காட்சி தான்.
அப்படி பார்த்த படங்களில் ஒன்று ‘தளபதி’.
அங்குள்ள தியேட்டர்களில் இரண்டு, மூன்று பேர் இருந்தால் கூட சினிமா காட்சிகள் நடைபெறும்.
நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணி புரிந்தது இல்லை. சினிமாக்களை பார்த்தே டைரக்டர் ஆனவன்’’ என்று தியேட்டரில் படம் பார்த்த பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார், வெங்கட் பிரபு.
-பா.பாரதி.