தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் பதவி: பார்த்திபன் ராஜினாமா

சென்னை:

மிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பதவியை நடிகர் பார்த்திபன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இன்றும், நாளையும் இளையராஜா 75 என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் பார்த்திபன் ராஜினாமா சலசலப்பை உருவாக்கி உள்ளது.

சமீபத்தில் பத்திரிகை ஒன்றில், இளையராஜா குறித்து மிக உயர்வாக,  “சில பேருக்கு ராஜா சார் கூரையா இருந்திருப்பார். சில பேருக்கு மொட்டை  மாடியா இருந்திருப்பார். இன்னும் சில பேருக்கு நிலவா இருந்திருப்பார். ஆனா, எனக்கு ராஜா சார் இது எல்லாத்தையும் தாண்டி அண்ணாந்து பார்த்து ஆச்சர்யப்படுற வைக்கிற ஆகாயமாதான் இருக்கார்.” என்று பேசிய பார்த்திபன் நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், பார்த்திபன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பி இருப்பது  தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜினாமாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து பார்த்திபன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.