கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்தது ஏன்? காரணத்தை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக்குவதால் விளைவுகள்  மிகவும் மோசமானதாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கிரிமினல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

வேட்பாளர்களின் வழக்குகள், குற்ற விவரங்கள், விசாரணை நிலை உள்ளிட்டவை குறித்த விவரங்களை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் கட்சி இணையதளங்களில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் வெளியிட வேண்டும்.

வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும் இந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் விவரங்களை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் முறைப்படி தெரிவிக்க வேண்டும். கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். இந்த உத்தரவை 2018ம் ஆண்டே 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: criminal Candidates, election, supreme court, உச்ச நீதிமன்றம், கிரிமினல் வேட்பாளர்கள், தேர்தல்
-=-