1
 
அம்மையப்படனை சுற்றி வந்தால், உலகையே சுற்றிவந்தது போல என்று சொல்லி பிள்ளையார் ஞானப்பழத்தைப் பெற்றது திருவிளையாடல் புராணம். அதே போல, குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வென்றுவிட்டால் போதும், ஒட்டுமொத்த தமிழகத்தைக் கைப்பற்றிவிடலாம் என்று கட்சிகள் நம்புகின்றன.
அது..  கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி!
ஏனென்றால், இங்கு  வெற்றி பெறும் கட்சியே, மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வென்று  ஆட்சியை பிடிக்கிறது. 1971 சட்டப்பேரவை தேர்தலில் இருந்து இப்படித்தான் நடந்துவருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவைச் சேர்ந்த எஸ்.மணியப்பன் வெற்றி பெற்றார். அப்போது, திமுக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 1977, 1980, 1985 ஆகிய 3 தேர்தல்களிலும் அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.சின்னராசு வெற்றி பெற்றார். அப்போது தொடர்ந்து 3 முறையும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியை கைப்பற்றியது.
1989-ல் நடந்த தேர்தலில்  திமுகவைச் சேர்ந்த காஞ்சனா வெற்றி பெற்றார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தது. 1991-ல் அதிமுகவைச் சேர்ந்த கே.முனி வெங்கடப்பன் வென்றார் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.   இதேபோல் 1996-ல் திமுகவைச் சேர்ந்த காஞ்சனாகமலநாதன், வென்றார். ஆட்சியைப் பிடித்தது தி.மு.கழகம்.  2001-ல் அதி.மு.கவைச் சேர்ந்த கோவிந்த ராஜ் வென்றார். அ.திமு.க ஆட்சியைக் கைப்பற்றியது. 2006-ல் தி.மு.கவைச் சேர்ந்த டி.செங்குட்டுவன் வெற்றி பெற்றனர். தி.மு.க ஆட்சி அமைந்தது.  2011-ல் அ.தி.மு.கவைச் சேரந்த கே.பி.முனுசாமி  வெற்றி. ஆட்சியும் அதிமுக வசம் போனது.
ஆகவே, எப்படியாவது கிருஷ்ணகிரி தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பார்ப்போம்.. கிருஷ்ணகிரி பழம், யாருக்கு கிடைக்கப்போகிறது என்று!