சென்னை: கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் உட்கட்சி பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்று அதிமுக விதிகளில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.

மேலும் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய திருத்தமாக, உட்கட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர், தற்போதைய நிலையில், 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இப்போது தான் நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் முக்கிய திருத்தம் சசிகலாவுக்கு வைக்கப்பட்டு இருக்கும் செக்காகவே கருதப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.