வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது- கமல்

சென்னை:
வேட்பாளர்கள் பிரசார செலவை, கட்சி ஏற்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், 2வது நாளாக, நேற்று நடந்தது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, விழுப்புரம், நெல்லை மண்டலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில், ‘பிரசார செலவை வேட்பாளர்களே ஏற்க வேண்டும்; கட்சி ஏற்காது’ என, திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், போட்டியிட முன்வந்தவர்கள் யோசிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை, 6:00 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக் கூட்டம், சென்னை, மயிலை மாங்கொல்லையில் நடக்க உள்ளது. அதில், கமல் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.