காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்! பாஜக எம்எல்ஏ சைனி சர்ச்சை

முசாபர்புர்:

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், பாஜக தொண்டர்கள் காஷ்மீர் சிறுமிகளை திருமணம் செய்ய உற்சாகமாக உள்ளனர் என்று பாஜக எம்எல்ஏ சைனி தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35ஏ ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசின் அதிரடி முடிவு நாடு முழு வதும் பரபரப்பையும், காஷ்மீரில் பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.

ன்னர் ஹரிசிங் ஆட்சியின் கீழ் தனி நாடாக விளங்கிய ஜம்மு – காஷ்மீர் பகுதி இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அதனுடன் இணைக்கப்பட்டது. அப்போது, அங்குள்ள மக்களுக்காக சில அரசியல் சாசன உரிமைகள் வழங்கப்பட்டன. அதன்படி அந்த மாநில வளர்ச்சிக்காக, இந்திய அரசால் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 & 35A  கொண்டு வரப்பட்டது.

அதன்படி,  ஒரு நாட்டுக்குள்ளே தனி அரசியலமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே உண்டு. காஷ்மீருக்கென தனிக்கொடியும் உள்ளது. மேலும், இந்த சிறப்பு சட்டப்படி, காஷ்மீர் ஆண்கள் இந்தியாவின் எந்த மாநிலப் பெண்களையும் திருமணம் செய்யலாம். ஆனால், பிற மாநில ஆண்களை காஷ்மீர் பெண்கள் திருமணம் செய்தால் அதற்குப் பிறகு அந்தப் பெண் `காஷ்மீர் பெண்’ என்ற அந்தஸ்தை இழப்பார். அதாவது காஷ்மீரில் அந்தப் பெண்ணுக்கு உள்ள சொத்துகளைக்கூட இழக்க வேண்டிவரும்.

காஷ்மீர் மாநிலத்தவர் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சொத்துகளை வாங்கலாம். ஆனால், இந்தியாவின் பிறமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது.

இதுபோன்ற பல நடைமுறைகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக  காஷ்மீர் பெண்கள் வேறு மாநில ஆண்களை திருமணம் செய்ய முடியும் நிலை உருவாகி உள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்,  இனிமேல் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம், அவர்களை திருமணம் செய்ய பாஜக தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர் என்று சர்ச்சை புகழ்  பாஜக எம்எல்ஏ சைனி தெரிவித்து உள்ளார்.

முசாபர்பர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  பாஜக எம்எல்ஏ விக்ரம்சிங் சைனி, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் போது, கட்சித் தொண்டர்கள் தற்போது உற்சாகமாக உள்ளனர். அவர்கள் இனிமேல்  காஷ்மீரில் உள்ள அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் “இந்த நாட்டில் வாழ பாதுகாப்பற்றதாக உணருபவர்கள் மீது குண்டு வீச வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி யநிலையில், தற்போதைய சைனியின்  பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.