புதுடெல்லி: அமெரிக்க விமான நிறுவனங்கள், இந்தியாவிற்கான பயணிகள் விமானங்களை ஜூலை 23 முதல் இயக்குவதற்கு, இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இருநாடுகளுக்குமிடையே, பயணிகள் விமானப் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனையடுத்து, ஜூலை 23ம் தேதி முதல், அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவிற்கான பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், யுஏஇ, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுடன், பேச்சுவார்த்தை அடிப்படையில், பரஸ்பர விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.