கொல்கத்தா: கொரோனா மையங்களான சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கான தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக  மார்ச் 25 முதல் ல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நகரங்களில் இருந்து தங்களது மாநிலத்திற்கு விமானங்களை இயக்க வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.
அதையடுத்து, கொரோனா ஹாட் ஸ்பாட் மையங்களான சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத், நாக்பூர், புனே உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவுக்கு விமானங்கள் இயக்க அம்மாநில அரசு தடை விதித்தது.
இப்போது இந்த தடை வரும் 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்க அரசின் கோரிக்கை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹா மத்திய சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கடிதம் எழுதினார்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து ஜூலை 31 வரை கொல்கத்தாவுக்கு எந்த விமானங்களும் திட்டமிடப்படக்கூடாது என்று மீண்டும் கோரப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.