விமானத்துக்குள் புகை பிடிக்க முயன்றவர் பயங்கரவாதியா ? : கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா

விமானத்துக்குள் புகை பிடிக்க முயன்று கைது செய்யப்பட்ட பயணி தம்மை தீவிரவாதி என சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்த தினமாகும். அனைவரும் அன்று தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பலரும் தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்த அதே நாளில் கொல்கத்தாவில் ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த முழு விவரம் நேற்று வெளியாகி உள்ளது.

நவம்பர் 26 ஆம் தேதி அன்று அமிர்தசரஸ் – டில்லி – கொல்கத்தா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி தாம் விமானத்துக்குள் புகை பிடிப்பேன் எனக் கூறி புகை பிடிக்க முயன்றுள்ளார். இதனால் அவருக்கு விமான கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆயினும் அவர் மேலும் தகராறு செய்ததால் அவர் கொல்கத்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆகி உள்ளது.

தற்போது இந்த தகவல் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புகை பிடிக்க முயன்ற அந்த பயணி தனது முகத்தில் கைக்குட்டையை கட்டியபடி ஒரு புகைப்படம் எடுத்து ஒரு சமூக வலை தளத்தில் தாம் ஒரு பயங்கர வாதி என தகவல் வெளியிட்டுள்ளார். அதை அவருக்கு பின்னால் எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பெஞ்சமின் என்னும் பயணி பார்த்து விட்டு விமான கேப்டனுக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த தகவலை கேப்டன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பிறகு அந்த பயணி புகை பிடிக்க முயன்றுள்ளார். ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விமான நிலைய காவல்துறைக்கு அந்த பயணி பயங்கரவாதி என பதிவிட்டதை அறிவித்ததை ஒட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.