டெல்லி: இத்தாலி, கொரியா நாட்டில் இருந்து வருவோர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து COVID-19 வைரஸ் இல்லை என்பற்கான சான்றிதழை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, ஏற்கனவே விசா கட்டுபாடுகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இந் நிலையில், ஒரு அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இத்தாலி அல்லது கொரியா குடியரசிலிருந்து பயணிக்கும் அல்லது வருகை தரும் பயணிகளுக்கு சான்றிதழ் தேவை. அந்த நாடுகளின் சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நியமிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து COVID-19 இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும்.

வரும் 10ம் தேதி காலை 12 மணி முதல் இது அமல்படுத்தப்படும். இதன்மூலம்,  COVID-19 பரவல்கள் குறையும், இது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் என்று மத்திய அரசு கூறி உள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 வயது பேடிஎம் ஊழியர் ஒருவர் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் இருந்து டெல்லி வந்த மற்றொருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி அதிகாரிகள் அந்த நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரின் தொடர்பையும் கண்டுபிடித்தனர். தீவிர முயற்சிக்கு பின்னர், ​​நோயாளியின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் ஆக்ராவில் இருப்பதும், அவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.