ஸ்லாமாபாத்

ம்ரான்கான் அறிவிப்புக்கு மாறாக கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாஸ்போர்ட் தேவை எனப் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது

சீக்கிய மத நிறுவனரும் சீக்கியர்களின் முதல் குருவுமான குருநானக் நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது.  அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கமாகும்.   அதையொட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவில் உள்ள தேரா பான நானக் முதல் கர்தார்பூர் குருத்வாரா வரை ஒரு பாதையை அமைத்துள்ளன.

இந்த பாதை மூலமாக தினமும் சுமார் 5000 பேர் பயணம் செய்யலாம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.  அத்துடன் இந்த பாதை வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   குருநானக் 550 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை வரும் 12 ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்பூருக்கு பயணம் செல்லும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாஸ் போர்ட் தேவை இல்லை எனவும் வேறு  அடையாள அட்டை இருந்தாலும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.  அத்துடன் 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்துக் கொண்டால் மட்டுமே  போதுமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கஃபூர், “கர்தார்பூர் பாதை வழியாக பயணம் செய்யும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு விசா தேவை இல்லை.  ஆனால்  பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக  அடையாள அட்டையாக பாஸ்போர்ட் அவசியம் தேவை ஆகும்.” என அறிவித்துள்ளார்.