டில்லி

டந்த 2 வாரங்களாக 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் புது கொரோனா தொற்று ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.  அதைப் போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.   ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவும் சில மாவட்டங்களில் பாதிப்பே இல்லாத நிலையிலும் உள்ளன.

இன்று மாலை மத்திய சுகாதார இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் “இன்று இந்தியாவில் 1334 புதிய கொரோனா நோயாளிகள் உறுதி செய்யப்பட்டு இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கிஅ 15712 ஆகி உள்ளது.   சுமார் 24 பேர் மரணம் அடைந்ததால் கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 507 ஆகி உள்ளது.  மொத்தம் 2231 பேர் குணமாகி  வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை நாடெங்கும் 3,86,791 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதில் நேற்று ஒரே நாளில் 37,193 பரிசோதனைகள் நடந்தன.  இவற்றில் 29,287 பரிசோதனைகள் ஐசிஎம் ஆர் நெட் ஒர்க் ஆய்வகங்களிலும் 7886 சோதனைகள் தனியார் ஆய்வகங்களிலும் நடந்துள்ளன.

கடந்த 2 வாரங்களாக 23 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் புதிய கொரோனா நோயாளிகள் ஒருவரும் பதிவாகவில்லை.   புதுச்சேரியின் மாகே மாவட்டத்தில் கடந்த 24 நாட்களாகவே ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.  இவ்வாறு கொரோனா பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.