பிரிஸ்பேன்: கடந்த தொடரின் தோல்வியே, ஆஸ்திரேலிய அணியினருக்கு, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஊக்கமாக அமையும் என்றுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவுக்கு எதிரான அந்த தோல்வியின்போது, அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் பலரை அந்த உணர்வுதான் இன்று செலுத்துகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் மீண்டும் தங்கள் ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர் மற்றும் தங்கள் திறமையைக் காட்ட விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

எல்லோருமே உற்சாகத்துடன் இருக்கிறோம். கடந்தமுறை நாங்கள் தேவையான ரன்களை சேர்க்கவில்லை. இம்முறை எங்களின் சில வீரர்கள் அது பற்றிப் பேசியுள்ளனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் கடந்தமுறையை விட அதிகமான ஓவர்களை வீசவைத்தால் போதும். ஏதோ ஒரு வழியில், அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதை எங்கள் பந்துவீச்சு ஏற்கனவே காட்டியிருக்கிறது

கடந்தமுறை இருந்ததை விட, எங்கள் அணி தற்போது மேம்பட்டு இருக்கிறது. ஸ்மித், வார்னர் போன்றோர் இல்லையென்றாலும் ஒரு தொடரை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால், அந்தத் தோல்வி இன்னும் என்னை வாட்டுகிறது” என்றுள்ளார் அவர்.