ஜோகன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்கா

னிதர்களை உயிர்த்தெழ வைப்பதாக சொல்லிக் கொள்ளும் தென் ஆப்ரிக்க பாதிரியார் ஒருவரிடம் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவை உயிர்த்தெழ வைக்குமாறு மற்றொரு பாதிரியார் சவால் விடுத்துள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் இன்னும் மந்திரம், சூனியம்,.  இறந்தவரை பிழைக்க வைப்பது போன்றவை நடத்துவதாக ஏமாற்றுவது நடந்து வருகிறது.   பலரும் இது போல் செய்து பணத்தை பறித்து வருகின்றனர்.   அவ்வகையில் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகர பாதிரியாரான ஆல்ப் லுகாவ் என்பவர் தம்மால் இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியும் என அறிவித்தார்.

அதற்கு சான்றாக அவர் ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.  அந்த வீடியோவில் ஒரு சவப்பெட்டியின் உள்ளே ஒருவர் படுத்துள்ளார்.   அவ்வாறு படுத்திருப்பவரிடம் பாதிரியார் ஆல்ப் லுகாவ் ஒரு சில ஜெபங்களை ஜெபித்து ’எழுந்திரு’ என கூச்சலிட்ட உடன் அவர் ஒரு குலுக்கலுடன் எழுகிறார்.   இதை சுற்றி உள்ள பக்தர்கள் கண்டு ஆரவாரம் செய்கின்றனர்.

இந்த வீடியோ போலி என மற்றொரு தென் ஆப்ரிக்க பாதிரியாரான மொபோரோ மோட்சோனெங் என்பவர் கூறி உள்ளார்.   அவர் ஆல்ப் லுகாவ் பணி புரியும் தேவாலயத்துக்கு முன்பு சென்று அவரை எதிர்த்து கூச்சலிட்டுள்ளார்.   ஆனால் ஆல்ப் லுகாவ் தனது தேவாலய கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே பதுங்கி விட்டார்

அத்துடன் மொபோரோ,  “பாதிரியார் லுகாவ் உண்மையிலேயே உயிர்த்தெழ வைக்கும் சக்தி உடையவர் என்றால் அவரை நான் மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் சமாதிக்கு அழைத்துச் செல்கிறேன்.  மண்டேலாவை லுகாவ் உயிர்தெழ வைப்பாரா?” என சவால் விடுத்துள்ளார்.

தற்போது சவால்; விடும் பாதிரியார் மொபோரோ தாம் சொர்க்கத்துக்கு உயிருடன் சென்று மொபைலில் புகைப்படம் எடுத்ததாக தமது சீடர்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.