தனயனுக்கு வழிவிட்ட தந்தை – பஸ்வான் கட்சிக்கு மகன் சிராக் பஸ்வான் தலைவரானார்!

புதுடெல்லி: ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக, பஸ்வானின் 37 வயது மகன் சிராக் பஸ்வான் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பீஹாரின் முக்கிய கட்சிகளில் ஒன்று ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி. கடந்த காலங்களில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அக்கட்சி, பின்னர் 2014 முதல் பா.ஜ. கூட்டணியில் இடம்பெற்று வருகிறது.

நரேந்திர மோடியின் அரசில் இரண்டாவது முறையாக கேபினட் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் ராம்விலாஸ் பஸ்வான்.

இந்நிலையில், பல கட்சித் தலைவர்கள் செய்வதைப்போன்று, இவரும் தன் மகனை அரசியலில் ஆளாக்க நினைத்தார். இதன்பொருட்டு, முதற்கட்டமாக தனது கட்சியின் தலைவர் பதவியை மகனுக்கு வழங்க முடிவுசெய்தார்.

இந்நிலையில், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், சிராக் பஸ்வான் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் பொறுப்பு ஏற்றதையடுத்து, கட்சித் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இனி இவருக்கு வழங்கப்படுவதாய் கூறப்பட்டுள்ளது.