டில்லி:

பிரபல யோகா குரு தயாரிப்பான பதஞ்சலி  பொருட்களுக்கு கடந்தஆண்டு கத்தார் நாடு தடை விதித்திருந்த நிலையில், தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக பதஞ்சலி அரபுநாடான கத்தாரில் தனது விற்பனையை தொடங்கும் என தெரிகிறது.

பிரபல யோகா குருவான  பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், உணவுப் பொருட்கள் முதல் சோப், ஷாம்பு, அழகு கிரீம்கள் என அனைத்து வகையான பலசரக்கு பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும்,   பதஞ்சலி  ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருட்களால்  தயாரிக்கப்படுவதாக தம்பட்டம் அடித்து வருகிறது.

இந்த நிலையில், கத்தார் நாட்டில் பதஞ்சலி பொருட்களில், ரசாயனக் கலப்பு உள்ளதாக கூறி, அங்கு  பதஞ்சலி பொருட்கள் விற்பனைக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கபட்டது.

இந்த நிலையில், தற்போது பதஞ்சலி பொருட்களுக்கு கத்தார் நாடு ஹாலால் சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பதஞ்சலி செய்தி தொடர்பாளர் டிஜாராவா எஸ்.கே., கத்தாரில் பதஞ்சலி தயாரிப்புகள் தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் சதித்திட்டத்தின் விளைவாக அவ்வாறு அறிவிக்கப்பட்டது. தற்போது, பதஞ்சலி பொருட்களுக்கு கத்தார் அரசு  ஹலால் சான்றிதழ் வழங்கி உள்ளது. கத்தாரின்   சுகாதாரத் துறை அனைத்து பதஞ்சலி பொருட்களையும் இறக்குமதி செய்ய அனுமதித்தது என்றார்.

கத்தார் நாட்டில் தயாரிப்புகள் தடைசெய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று விளக்கம் அளித்துள்ளார்.