பட்டேல் சிலை… தமிழ்க் கொலை..:  என்னதான்யா நடந்துச்சு?

லகிலேயே மிக உயரமான சிலை அமைத்துவிட்டோம் என்று பா.ஜ.க. பெருமிதப்படும் அதே நேரத்தில், இரு சர்ச்சைகள் கிலம்பி அவர்களது உற்சாகத்தை போக்கடித்திருக்கின்றன.

முதல் சர்ச்சை…  “ஒரு தலைவரை பெருமைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு 3000 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டுமா? நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு போதுமான சாப்பாட்டுக்கு வழயில்லை.. மாசு காரணமாக உலகிலயே அதிகமான குழந்தைகள் மரணமடைவது இந்தியாவில்தான்.. உலகிலேயே கழிப்பறை இல்லாத மக்கள் அதிகம் வசிப்பதும் இங்குதான்..

இந்த குறைகளைப் போக்க நடவடிக்கை எடுத்து அதற்கு பட்டேல் பெயரைச் சூட்டியிருக்கலாமே…” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இன்னொரு சர்ச்சை…

பட்டேல் சிலையின் முகப்பில் தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்பது.

பட்டேல் சிலைக்கு `ஒற்றுமையின் சிலை’ என்று மத்திய அரசு பெயர் சூட்டியிருக்கிறது.  இதை ஆங்கிலத்தில் ` ஸ்டாட்ச்யூ ஆஃப் யூனிட்டி’ என்கிறார்கள்.  இந்த வார்த்தைகளை ஆங்கிலம் உள்பட பத்து மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.

இதில், தமிழ் மொழிபெயர்ப்பு மிகத்தவறாக அமைந்துவிட்டது. ` ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இது தமிழ் மக்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. சமூகவலைதளங்களில் தமிழர்கள் பலரும் இந்த மொழிபெயர்ப்பைக் கண்டித்திருக்கிறார்கள்.

“மத்திய அரசுக்கு தன் நாட்டின்  முக்கியமான மொழியை சரியாக பதிவிட தெரியவில்லையா? மோடியின் கீழ்  தமிழ் தெரிந்த உயர் அதிகாரிகள் பலர் பணியாற்றுகிறார்கள்.  மோடி வென்ற வாரணாசி தொகுதியில் தமிழர்கள் கணிசமாக வசிக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழியை கொலை செய்திருக்கின்றனரே. இது நிர்வாகத் திறமை இன்மையா அல்லது தமிழர்கள் மீதான அலட்சியமா” என்று பலரும் ஆதங்கத்துடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், “அப்படி ஒரு பெயர்ப்பலகையே வைக்கப்படவில்லை. யாரோ வேண்டுமென்றே அப்படி போட்டோஷாப் செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட்டார்கள்” என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

இதனால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் நடந்ததுதான் என்ன?

த் தவறாக மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்

தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், “பட்டேல் சிலையில்  தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டுள்ளது குறித்து மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசினேன்.. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்” என்று வார இதழ் ஒன்றின் இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆக, பாஜகவினர், “போட்டோஷாப்” என்று கூறியதே கேள்விக்குறியாகிறது.

குஜராத் முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்..

தவிர, தனது குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா கூறியதை பிரபலமான பி.பி.சி. வெளியிட்டிருக்கிறது. அவர், “சிலையைச் சுற்றிலும் எடுத்த பல படங்களில் தவறான மொழி பெயர்ப்புடன் கூடிய இந்தப் பலகையும் இருந்தது நூறு சதவிகிதம் உண்மை. அந்த பலகை  மறைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி எழுதியிருந்தது வெளியில் தெரிந்தது. அதை நான் தான் புகைப்படம் எடுத்தேன்” என்கிறார் அவர்.

மேலும்,  “நான் இந்தப் புகைப்படத்தை அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல் எடுத்தேன். அந்த சிலையை சுற்றி வைக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புப் பலகைகளையும் படம் எடுத்தேன்” என்கிறார் பி.பி.சி. குஜராத் பகுதி செய்தியாளர் தேஜஸ் வைத்யா

மேலும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிட்டட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சந்தீப்குமார், “சிலையை சுற்றி இருக்கும் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் லார்சன் & டூப்ரோ நிறுவனமே தயாரித்தது. சமூக ஊடகங்களில் அது பற்றிப் பேசப்படும் கருத்துகளை அடுத்து அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டோம்.  அதை அகற்றிவிட்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் இரண்டு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டது. ஆனாலும் அந்தப் பலகை அகற்றப்படாமல் இருந்தால் நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம்” என்று கூறியிருக்கிறார். இதையும் பிபிசி வெளயிட்டுள்ளது.

இந்த நிலையில் குஜராத் பா.ஜ.க. முதல்வர் விஜய் ரூபானியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இந்த (அதாவது, தவறாக மொழிபெயர்க்கப்பட்ட பலகையின்) படம், பதிவிடப்பட்டிருந்தது.

சர்ச்சை வெடித்தவுடன் அந்தப் படம் நீக்கப்பட்டது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விசயம்.. குஜராத் முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தவறான பெயர்ப்பலகை படம் இருப்பது குறித்து பிரபல ஆங்கில நாளிதழின் இணையப்பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் குஜராத் முதல்வரின் இணையப்பக்கத்தில் இந்தப் படம் நீக்கப்பட்டதும், ஆங்கில நாளிதழின் இணையப்பக்கத்திலும்  குறிப்பிட்ட செய்தி எடிட் செய்யப்பட்டு படம் நீக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

சரி.. என்னதான் நடந்திருக்கிறது?

தவறாக தமிழில் எழுதப்பட்ட பலகையை குஜராத் மாநில முதல்வர் தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கிறார்.. பிறகு நீக்கியிருக்கிறார்..

பிரபலமான பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தவறாக எழுதப்பட்ட பலகையை தான் இரண்டு நாட்களுக்கு முன்பே படம் எடுத்ததாக கூறியிருக்கிறார்..

பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான வானதி சீனிவாசன், தவறாக எழுதப்பட்ட பலகை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீனிவாசனிடம் பேசியதாகவும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

இதிலிருந்தே, தவறாக எழுதப்பட்ட பலகை இருந்தது உண்மையா பொய்யா என்பதை அறியலாம்.

தமிழைப்போல  அரபி மொழிபெயர்ப்பும் தவறு என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.