நாள் முழுவதும் உழைப்பு.. ஆனால் வாரக்கூலி 100 ரூபாய்..

நாட்டில் கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க 1976-லேயே கடும் சட்டம்  இயற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இன்னமும் இந்த அவலம் தொடர்வது மிகவும் வேதனையான விசயமாக இருக்கிறது.  அதிலும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட அவர்களைக் கடுமையாக வேலை வாங்குவது என்பது மிருகத்தனமான செயல்.

சென்னை சோழவரம் அருகேயுள்ள ஆத்தூர் கிராமத்தில் வினோத் என்பவருக்குச் சொந்தமான ஒரு செங்கல் சூளையிலிருந்து வட மாநிலங்களிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்து வரப்பட்ட 350-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இங்கே அடிமைக்கூலிகளாக பணி செய்து வரும் இவர்களின் மொபைல் போன்களை எல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டு அதிகாலை 3 மணியிலிருந்தே வேலை செய்ய வைத்துள்ளார் வினோத். மூன்று பேர்கள் கொண்ட ஒரு குடும்பம் தினமும் 2000 செங்கற்கள் தயாரித்தாக வேண்டும்.  ஆனால் இதற்காக ஒரு குடும்பத்திற்கு வாரம் ரூ. 300/- மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது ஒருவருக்கு வாரக்கூலி 100 ரூபாய் மட்டுமே.  அதிலும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட இவர்களைக் கடுமையாக வேலை வாங்கியுள்ளார் இதன் உரிமையாளர்.  அத்துடன் ஜூன் மாதம் வரை வேலை செய்தால் மட்டுமே சொந்த ஊருக்குத் திரும்ப முடியும் என்று மிரட்டியும் வந்துள்ளார்.

எப்படியோ முதலாளிக்குத் தெரியாமல் ஒளித்து வைத்த மொபைல் போனிலிருந்து கோபர்தன் மித்ரா என்பவர் தனது சொந்த ஊருக்கு தகவலளித்துள்ளார்., அவர்கள் திருவள்ளுவர் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அளித்த புகாரின் பேரில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நடவடிக்கை எடுத்து ஞாயிறன்று மாலை 5 மணியளவில் செங்கல் சூளையில் சோதனை நடத்தியுள்ளனர். இதில் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது அங்கேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

– லெட்சுமி பிரியா