அகமதாபாத்: பாரதீய ஜனதா கட்சி, ஒரு மார்க்கெட்டிங் நிறுவனம் போல் மாறிவிட்டது என்று குற்றம்சாட்டி, குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ரேஷ்மா பட்டேல், அக்கட்சியிலிருந்து விலகியதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளார்.

இவர் ஒரு படிடார் இனத் தலைவர்.

தம் பொருட்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, மக்களை ஏமாற்றும் விற்பனைப் பிரதிநிதிகளைப் போல் நாங்கள் நடந்துகொள்ள, கட்சியானது நிர்ப்பந்தப்படுத்துவதால், இந்த விலகல் முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர் தனது விலகல் கடிதத்தை, குஜராத் மாநில பாரதீய ஜனதா தலைவர் ஜிது வாகானிக்கு அனுப்பியுள்ளார்.

வரும் தேர்தலில், போர்பந்தர் மக்களவைத் தொகுதி மற்றும் மனாவதர் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள அவர், “இதர முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் வாய்ப்பு தரப்படவில்லை எனில், சுயேட்சையாக போட்டியிடுவேன்” என்றுள்ளார்.

ஏற்கனவே, பாரதீய ஜனதாவிலிருந்து மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் காகடே விலக முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி