இடஒதுக்கீடு கோரி ஆகஸ்ட் 25ம் தேதி முதல் உண்ணாவிரதம்….ஹர்திக் படேல்

காந்திநகர்:

பட்டிதார் சமூகத்துக்கு இட ஒதுக்கீடு கோரி ஆகஸ்ட் 25ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.


குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2015ம் ஆண்டு முதல் ஹர்திக் பேடல் போராடி வருகிறார். இந்நிலையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பட்டிதார் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு பெற்று தருவது தான் எனது முதல் கவலை. இதற்காக வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். எனது இறுதிப் போராட்டமாக இது இருக்கும். இடஒதுக்கீடு கிடைக்கும் வரை சாப்பிட மாட்டேன்.

இதன் மூலம் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இல்லை எனது உயிரை விட்டுவிடுவேன். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இட ஒதுக்கீடு போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இட ஒதுக்கீடு தான் நமது முதல் பிரச்னை. இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.