பாட்னா: பீகார் மாநிலத்தைப் புரட்டியெடுக்கும் மழை வெள்ளத்தில் அம்மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் அவரின் குடும்பத்தினரே சிக்கிக்கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

உத்திரப்பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், உத்ரகாண்ட், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பேய் மழை பெய்துவருகிறது. பீகார் தலைநகர் பாட்னா வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா சார்பாக துணை முதல்வராக இருப்பவர் சுஷில்குமார் மோடி. இவர் வசித்த வீட்டை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. துணை முதல்வரின் குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்தனர்.

இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் சென்றது. அவர்கள் விரைந்து சென்று சுஷில்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை மீட்டு, படகில் கொண்டுசென்று பத்திரமான இடத்தில் சேர்த்தனர்.

பீகாரில் மட்டும் இதுவரை 40000 ஆயிரம் பேர் மழை வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வடமாநில மழையில் இதுவரையான பலி எண்ணிக்கை 130 என்பதைத் தாண்டியுள்ளது.