சென்னை விமானத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்: தயாநிதி மாறன்

சென்னை: 

சென்னை விமானத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ள திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது. நாள்தோறும், சராசரியாக 40,000 பயணிகள் வந்து செல்வதால் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்ட நெரிசல் உண்டாகும் நேரத்தில் பயணிகளின் காத்திருப்பு நேரம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவே இந்த கடிதத்தை எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பெரும்பாலான விமான பயணிகள் நீண்ட வரிசையில் பயணிகள் நின்று கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து சமுக இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

CHENNAI, TAMIL NADU, INDIA – January 14, 2018. Chennai Airport, International Terminal. Passengers wait before boarding their plane.

இதுகுறித்து இந்திய விமான கட்டுபாட்டு ஆணைய அதிகாரி தெரிவிக்கையில், விமான நிலையத்தை நவீன படுத்தும் இரண்டாம் கட்ட பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. இதனாலேயே பயணிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட முனையம் செயல்பாட்டுக்கு வந்து உடன் இந்த பிரச்சினை சரி செய்யபட்டு விடும் என்றார்.

இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.