வார ராசிபலன் 18-5-18 முதல் 24-5-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

அழகு சாதனங்களுக்கும் அலங்காரப் பொருட்களுக்கும் பணம் ஓடும். குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றங்களைப் பார்ப்பீர்கள். வேறு வேலை போவதோ அல்லது இந்த உத்யோகத்திலேயே முன்னேற்றமோ நிகழும். நல்லது செய்யறவங்க எல்லாம் எனிமிப்பட்டாளம் மாதிரி ஒரு பிரமை உங்களுக்கு. அந்த எண்ணத்தை முதலில் கிருமி நாசினி போட்டு வாஷ்பண்ணிக்குங்க. மம்மி டாடிக்குத் தனிப்பட்ட முறையிலும் வெற்றிகள் உண்டு….உங்க மூலமாகவும் பெருமைகள் உண்டு. அரசாங்கத்தின் மூலம் நன்மையும் உதவியும் கிடைக்கும்.  உஷ்ணம் தாக்காமல் அவ்வப்போது தண்ணீர் குடிங்க.

ரிஷபம்

பேச்சில் இனிமைகூடி மற்றவர்களுக்கு நன்மை செய்வீங்க. பெரிய தீர்மானங்கள் எடுக்குமுன்பு சிறந்த ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து ஆலோசனை கேட்டு அதன்படி செய்யுங்கள். குழந்தைங்க அவங்க வயதுக்குத் தகுந்த மாதிரிதான் நடந்துப்பாங்க. நியாயமான கண்டிப்பை மட்டுமே காட்டுங்க.  காட்டுத்தன மான கண்மூடித் தனமான கண்டிப்பு வேண்டாம். குடும்பத்தில் உள்ள தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிநேகிதர்கள்/ சிநேகிதிகள் உதவிகரமாக இருப்பதோடு வழிகாட்டவும் செய்வார்கள்.

மிதுனம்

வெளியூர்ப்பயணம் சந்தோஷம் குவிக்கும். கோபம்  அதிகம் வர வாய்ப்புள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது நல்லது. திடீர் அதிருஷ்டம் டெரஸைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். பச்சை மிளகாயைப் படக்கென்று கடித்தமாதிரி வார்த்தைகளை விநியோகம் செய்ய வேண்டாம்.  காதல் திருமணம் நிறைவேறும். சண்டை போட்டுச் சற்றே விலகியிருந்த கணவர்/ மனைவி வெள்ளைக் கொடி காட்டிப்புன்னகை புரிவார்கள். உங்களுக்கும் மனம் லேசாகி நிம்மதி பிறக்கும். வெளிநாட்டில் உள்ள உங்கள் குடும்பத்தினருக்காகச் செலவு செய்ய வேண்டி வரும்.

கடகம்

முன்பு முகம் திருப்பிப் போனவர்கள் எல்லாம் இப்போது ”உன்னைப் போல் உண்டா!” என்பார்கள். புதிதாய் அறிமுகமான ஒரு பெண்மணி மூலம் நன்மைகள் வலது காலை எடுத்து வைத்து வரும். பல காலம் நீங்கள் மிகவும் முனைந்து காத்திருந்த உத்யோக மாறுதல் கிடைக்கும். தாயாருக்கு அவர்களின் தந்தை வழியில் லாபங்களோ நன்மைகளோ சொத்தில் பங்கோ கிடைக்கும். கல்விச் செலவுகள் அதிகரித்து அவை தாமதமாகவே பலன் தரும். இந்தப் பக்கம் ஒரு செலவு செய்தால் அந்தப் பக்கம் இரண்டு வரவுகள் வரும். வாகனம் வாங்குவீங்க. அதனால் சந்தோஷம் பெருகும்

சிம்மம்

பளிச்சென்று உங்களிடம் ஒரு மாற்றம் உங்களுக்கே தெரியும். டாடியின் புத்திசாலித்தனம் அலுவலகத்தில் அவருக்குப் பெயர், புகழ் பாராட்டை மட்டும் அல்லாமல் அவார்ட் ரிவார்ட் பணம் என்பனவற்றையும் இணைத்துக் கொடுக்கும். அரசாங்க உத்யோகமோ அல்லது அரசாங்கத்திடமிருந்து பிசினஸ் ஆர்டரோ கிடைக்கும். அலுவலகப் பொருப்புக்கள் தலைமேல் ஏறி உட்காரும். சாப்பிடவும் தூங்கவும் திரைப்படம்பார்க்கவும் கச்சேரி கேட்கவும் நேரம் இல்லைன்னு அங்கலாய்க்காதீங்க.  உங்களுக்கு விளையப்போகும் நன்மை அதையெல்லாம்விட உசத்தியானது.

கன்னி

கலைத்துறையிலும் சினிமாத்துறையிலும் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சகோதர சகோதரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வருமானமும் லாபங்களும் சற்றுத் தாமதமாகக்கூடும். உடனே டென்ஷனாகி உட்கார்ந்துவிடாதீர்கள். உங்கள் சிநேகிதர்கள் அல்லது சிநேகிதிகளுக்கு வாழ்வில் முன்னேற்றமும் நிதி வசதியும் அதிகரிக்கும். உங்களின் பேச்சினால், உங்களுக்கு மட்டுமன்றி உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்  நன்மை உண்டாகும்.

துலாம்

சகோதர சகோதரிகளிடம் வாக்கு வாதம் இல்லாமல் பார்த்துக்குங்க. சிலருக்குப் புது பெண்டாட்டி/ கணவர் அல்லது புது பாப்பா வரலாம். உத்யோகப் பொறுப்புக்கள் அதிகமாகும். மம்மிகூட சண்டை வேண்டவே வேண்டாம். சம்பளம் கூடும். பொறுப்பும் அதிகரிக்கும். பாராட்டு எல்லாவற்றையும்விட அதிகமாகும்.  குழந்தைகளைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அத்தனைக்கத்தனை உங்கள் வயிற்றில் பால் வார்ப்பார்கள்.  வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்

மேடை போட்டுப் பாராட்டுவாங்க. லாபங்கள் தாமதமானாலும் மனப்பக்குவம் கிடைக்கும். மாணவர்களும் நிதித்துறையில் வேலை பார்ப்பவர்களும் சற்று அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். நிதானமாய் அடி எடுத்து வையுங்கள். குறிப்பாக வீடு வாங்குவது .. உத்யோகம் மாறுவது.. போன்ற பெரிய தீர்மானங்கள் எடுக்கும்போது… பரபரப்போ அவசரமோ வேண்டாம். எப்போதையும்விட பணத்தை எண்ணக்கூட நேரம் கிடைக்காத அளவு வருமானமும் அதற்கேற்ற பொறுப்பும் அதற்குத் தகுந்த செலவும் உண்டு.

சந்திராஷ்டமம்: 17.05.2017 முதல் 19.05.2015 வரை

தனுசு

குழந்தைகளின் நலனுக்காக நிறைய செலவு செய்வீங்க. புதிய வேலை கிடைக்கும். அதற்குப் புது காரில் போவீங்க. நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகளைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் அது பெரிதாகாமல் இருக்க உங்க மௌனம் உதவும். வாயைத் திறக்காதீங்க. எடுத்த காரியங்களில் சற்றுத் தடைகளும் தாமதங்களும் ஏற்படத்தான் செய்யும். பயம் வேண்டாம். மெல்ல மெல்லக் காரியம் கைகூடும். வார்த்தைகளால் அலுவலகரீதியாக வானளவு நன்மைகள் ஏற்பட்டாலும் தனிப்பட்ட வட்டாரத்தில் உறவுகள் கெடாம பார்த்துக்குங்க.

சந்திராஷ்டமம்: 19.05.2018 முதல் 21.05.2018 வரை

மகரம்

வீடு அல்லது ஃப்ளாட் வாங்கப்போறீங்க. வியாபாரம் செய்பவர்களுக்க நல்ல யுக்திகள் தோன்றி வியாபாரம் சிறக்க வழி வகை பிறக்கும். எண்ணங்களின்மீது கவனம் செலுத்த வேண்டும். உங்களைத் தீய வழிகளில் அழைத்துச் செல்லும் நண்பர்களோ எண்ணங்களோ உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தந்தை வழி உறவினர்களிடமிருந்து சொத்து அல்லது பங்கு கிடைக்கலாம். அப்பா அம்மா எப்போதும் இல்லாத அளவு அனுசரணையாய் இருப்பாங்க. உடன் பிறந்தவர்கள் முன்பைவிட அன்பாய் இருப்பாங்க.

சந்திராஷ்டமம்: 21.05.2018 முதல் 24.05.2018 வரை

கும்பம்

கணவர்/ மனைவிக்கு விமானம் ஏறிக் கடல் தாண்டிச் செல்லக்கூடிய பயணம் அமையும். படிக்கும் குழந்தைகளாக இருந்தால் நம்ப முடியாத அளவு நல்ல  மதிப்பெண்கள் வாங்குவாங்க. பணம் புரளும். குழந்தைகளால் சந்தோஷம் கூரை வரை குவியும். மனைவி அல்லது கணவரின் தாயாருடன் இருந்து வந்து பிரச்சினைகள் நல்ல முறையில் தீரும். உங்களின் சீரிய முயற்சியால் குடும்பங்களுக்கிடையே இருந்து வந்த சண்டைகளும் சச்சரவும் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்வதால் அவர்களின் பாராட்டும் நன்றியும் கிடைக்கும்.

மீனம்

ரியல் எஸ்டேட்டில் உள்ளவர்களுக்கும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அரணாக இருப்பார்கள் என்பது நிம்மதி. அப்பாடா! எத்தனை காலத்துக்குப் பிறகு செலவுகள் கட்டுக்குள் அடங்குகின்றன! நட்புறவு சுமுகமாகும். வெளியூர் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பேக் செய்ய ஆரம்பிச்சிருப்பீங்களே. தந்தையின் உடல் நலனிலோ அல்லது அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவிலோ பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே மரியாதையும் அன்பும் பாசமும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.