தேர்வுகட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பு! சென்னை பல்கலைக்கழகத்தின் தைரிய நடவடிக்கை…

சென்னை: தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள  சென்னை பல்கலைக்கழகம்..  இது மாணவர் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. சுமார் 7 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முன் பாடங்கள் போதிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில் பொதுமுடக்கம்  காரணமாக,  கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத நிலை உருவானது. . இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்கு மறுதேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது.

இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடர்ந்துள்ளனர். அது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி கொடுக்க சிண்டிகேட்டில் முடிவு செய்து அறிவித்து. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி வழங்குவது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசித்து சில நாட்களுக்கு முன்பாக முடிவெடுத்தது.

அதைத்தொடர்ந்து,  சென்னை பல்கலைக்கழகம் தற்போது தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு தவிர இதர செமஸ்டர்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்வு முடிவை  ஆன்லைனில் வெளியிட்டு உள்ளது.

அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய  சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான தேர்வு முடிவுகளை https://egovernance.unom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் இருந்து அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த 1 லட்சத்து 9 ஆயிரத்து 518 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை முதலாவதாக சென்னை பல்கலைக்கழகம் பின்பற்றி தேர்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.