பெங்களூரு:

தேசபக்தி மிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்; தேச பக்தி இல்லாத முஸ்லிம்கள் மட்டுமே பாகிஸ்தானைஆதரிப்பார்கள் என்று கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, பாஜக சார்பில் மாநிலங்களில் பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில்  ஸ்ரீராமசேனா அமைப்பு சார்பில் பெங்களூருவில் பாராட்டு விழா நடைபெற்றது.

பெங்களூரு டவுன்ஹாலில் நடைபெற்ற விழாவில் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, அகண்ட பாரதம் அமைக்கப்பட வேண்டும் என்பதே நமது கனவு. ஆனால், ஏன் அதை சாதிக்க இயலவில்லை. அகண்டபாரதம் அமைக்க ஆதரித்தால் முஸ்லீம் களின் வாக்குகள் கிடைக்காது என்று சிலா் பயப்படுகிறார்கள் என்று கூறியவர், கர்நாடகாவில் நாம் ஆட்சிக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், மஜத கட்சிகளை சோ்ந்த சில எம்எல்ஏக்கள் என்னிடம் பேசியபோது,  நாங்கள் பாஜகவுக்கு வர தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் தொகுதியில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவா்கள் வாக்களிக்காவிட்டால் நான் வெற்றி பெறமுடியாது என்று தெரிவித்ததாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  எனது சிவமொக்கா தொகுதியில் எனது குருபா் சமுதாயத்தினா் 80 ஆயிரம் போ் இருக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்கள் 55 ஆயிரம் போ் வாழ்கிறார்கள். எனது நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் ஒரு தோ்தலிலும் நான் முஸ்லீம்களிடம் சென்று வாக்கு கேட்டது கிடையாது. முஸ்லீம்களிடம் வாக்கு கேட்கவேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று கூறிய வர், தேசபக்திமிக்க முஸ்லீம்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஆனால் தேசதுரோகி கள், தேசபக்தி இல்லாதவர்கள் மட்டுமே  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பார்கள், அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாமே மீட்கும் காலம் வெகுவிரைவில் வரும். நாடு முழுவதும் ஹிந்துத்துவா மற்றும் நாட்டுப்பற்றை மக்களிடையே அதிகளவில் பரப்ப வேண்டும். ஹிந்துத்துவா விவகாரத்தில் நாடே ஒன்றுபடும். ஹிந்துத்துவா கொள்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.