கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே பாஜக பெண் நிர்வாகி ஒருவர், அந்த பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ரூ.5ஆயிரம் கட்டினால் மோடி ரூ.6 லட்சம் தருவார் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்த தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த உத்தமன்கொட்டாயை சேர்ந்த பொதுமக்கள் சுமார்  15 பேர் எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் மீது மோடி  மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அவர்கள் கொடுத்த மனுவில்,  அருகிலுள்ள மிட்டஅள்ளி பஞ்சாயத்து திரவுபதியம்மன் கோவில் கொட்டாயை சேர்ந்த மாவட்ட பா.ஜ., மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் தருமன், குரும்பட்டியை சேர்ந்த அன்னேஜ் ஆகிய மூவரும், எங்களிடம், பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்ந்தால், மோடியிடம் இருந்து கறுப்பு பணத்தை ஒவ்வொருவருக்கும், தலா, 6 லட்சம் ரூபாய் பெற்று தருவதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு வங்கி கணக்கு துவங்க, தலா, 5ஆயிரம் ரூபாய், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, பழைய வங்கிக் கணக்கு பாஸ்புக் நகல், 24 போட்டோ ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்று கூறி, எங்களிடம் இருந்து பணம் மற்றும் ஆவனங்களை பெற்றனர்.

ஆனால்,  இன்று வரை  தங்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கவில்லை. பணமும் வரவில்லை. தாங்கள் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை கேட்ட போது, கறுப்பு பணம் வாங்கித்தர நாங்கள் தலா, 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். மீதிப்பணம் தலா, 29 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

தங்களை ஏமாற்றியதுபோல,  குரும்பட்டி, மிட்டஅள்ளி, கால்வேஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 300 பேரிடமும், ஆலப்பட்டியில் வசிக்கும் மங்கை என்பவர் மூலம், 400 பேரிடமும், 40 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளனர்.

எனவே, பிரதமர் மோடி கறுப்பு பணம் தருவதாக சொல்லி ஏமாற்றிய பாஜக மகளிர் அணி நிர்வாகி உள்பட 3 பேர் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  விசாரணையில், பா.ஜ., மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவர் சுமார்   400க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.