30 லட்சம் பேருக்கு ‘பாஸ்டேக்’ வழங்கி சாதனை படைத்துள்ளது ‘பேடிஎம்’

சென்னை :

நாடு முழுவதும் வாகனங்களுக்கு பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பிரபல பண பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் சுமார் 30 லட்சம் பேருக்கு பாஸ்டேக் வழங்கி சாதனை படைத்துள்ளது.

நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கும் வகையிலும், வாகனங்கள் தாமதமின்றி செல்லும் வகையிலும் பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை   வாயிலாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்காக ‘பாஸ்டேக்’ திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிச.15ந்தேதி முதல் கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி சுங்கக்கட்டணம் பல்வேறு வங்கிகள் மற்றும் பேடிஎம் போன்றவைகள் மூலம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ‘பேடிஎம்’ நிறுவனம்  சுமார்  30 லட்சம் பேருக்கு சுங்கக்கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும்  வரும் மார்ச் மாதத்திற்குள் 50 லட்சம் பாஸ்டேக் வினியோகம் செய்வதற்கு பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுதும் 10 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அத்துடன்,  புதிய வாகனங்களை வாங்குவோருக்கு உடனுக்குடன் ‘பாஸ்டேக்’ வழங்குவதற்கு மாருதி சுசூகி ஹூண்டாய் ஹோண்டா கியா எம்.ஜி. மோட்டார் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே பேடிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு நாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சி ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அதன் முதன்மை அதிகாரி தெரிவித்து உள்ளார்.