உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆஜர்?

டெல்லி:

ள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள  வழக்கின் விசாரணை யின்போது, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஊரகப்பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடை முறையாக பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆகையால் அதனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று கூறி உள்ளது.

ஆனால், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள், அனைத்து மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்திய பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என கூறி வருகிறது.

இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் மீண்டும் உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளன. இந்த வழக்கில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 100 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம் தற்போது ஜாமினில் உள்ள நிலையில், இன்று உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.