ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 4ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள நிலையில், அவர் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவம்பர் 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப டில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் 2007-இல் பதவி வகித்தபோது, வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதியை ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் பெறுவதற்கு அவரது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நிய முதலீட்டு மேம்பாடு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேட்டில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமும் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இது தொடா்பாக ப. சிதம்பரத்திற்கு எதிராக சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பான வழக்கை 2017, மே 15-இல் அமலாக்கத்துறை பதிவு செய்தது. இந்த வழக்கில் அக்டோபா் 16-இல் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் டில்லி திகார் சிறையில் சிதம்பரத்தை கைது செய்தனா்.  அதைத்தொடர்ந்து, அவரை 7 நாளில் காவலில் விசாரிக்க சிபிஐ  சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹா்  உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிதம்பரத்தில், அமலாக்கத் துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி டில்லி உயா்நீதிமன்றத்தில் நேற்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  நான் வெளிநாடு தப்பிச் செல்வதற்கோ அல்லது விசாரணையில் இருந்து தலைமறைவாவதற்கோ வாய்ப்பில்லை என கூறப்பட்டது.

இந்த வழக்கு டில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, சிதம்பரம் ஜாமின்  மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நவம்பர் 4ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

கார்ட்டூன் கேலரி