திருவனந்தபுரம்

பாஜக கூட்டணியில் இருந்த பிசி தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி அதில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது.

கேரள சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.  வாக்கெடுப்பு தினத்துக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ளன.  இந்த தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக என மூன்று அணிகள் களத்தில் உள்ளன.  இதில் பாஜக அணியில் குழப்பத்துக்கு மேல் குழப்பங்கள் காணப்படுகின்றன.  பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தாம் அந்த கட்சியிலேயே இல்லை என தெரிவித்து விலகியது குறிப்பிடத்தக்கதாகும்.

பி சி தாமஸ்

கேரள காங்கிரஸ் என்னும் பெயரில் கேரளாவில் 6 சிறிய கட்சிகள் உள்ளன.  இவற்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிசி தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது.  அந்த அரசில் பி சி தாமஸ் மத்திய சட்டத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இந்த கூட்டணி தற்போதும் தொடர்ந்த நிலையில் இந்த தேர்தலில் ஒரு இடம் கூட இந்த கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.  எனவே பிசி தாமஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்.

 

ஜோசப்

செய்தியாளர்களிடம் பி சி தாமஸ் இது குறித்து, “பாஜக கூட்டணி தர்மத்தை மதிக்காமல் நடப்பதால் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்.  நாங்கள் எங்கள் கட்சியை ஜோசப் தலைமையில் உள்ள கேரள மாணி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 இந்த தகவலை கேரள மாணி காங்கிரஸ் தலைவர் உறுதி செய்துள்ளார்.

பிசி தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சிக்கு கோட்டயம், இடுக்கி போன்ற மாவட்டங்களில் உள்ள கிறித்துவ குடும்பங்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.  இதை வைத்து அந்த வாக்குகளை தாமஸ் தலைமையிலான கட்சி மூலம் கவர பாஜக திட்டம் இட்டிருந்தது.

தற்போது  காங்கிரஸ் அணியில் உள்ள கேரள மாணி காங்கிரசில் தாமஸ் கட்சி இணைகிறது.  ஆகவே இது பாஜகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  மேலும் இந்த இணைப்பு இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் பாஜக வாக்குகளின் எண்ணிக்கையை மிகவும் குறைக்கக் கூடும்.